கர்ப்பகாலச் சர்க்கரை நோய்
கர்ப்பகாலச் சர்க்கரை நோய் என்பது கர்ப்பமாக இருக்கும் காலத்தில் அதிக இரத்தச் சர்க்கரையை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும்.
கர்ப்பகாலச் சர்க்கரை நோய் என்றால் என்ன?
கர்ப்பகாலத்தில் உடலுக்கு அதிக இன்சுலின் தேவை. இன்சுலின் என்பது கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன் ஆகும். இது நாம் உண்ணும் கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து கிடைக்கும் சர்க்கரையை உயிரணுக்களுக்கு நகர்த்த உதவுகிறது. அங்கு அது ஆற்றலாகப் பயன்படுத்தப்படும்.
உடலில் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாவிட்டால் கர்ப்பகாலச் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
கர்ப்பகாலச் சர்க்கரை நோயின்போது அரிதாகவே அறிகுறிகள் தெரியவரும். இதனால் பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்பகாலச் சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கர்ப்பகாலச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும் பிரசவத்தின்போதும் சிக்கல்கள் உருவாகும் ஆபத்து அதிகம் என்றாலும், பெரும்பான்மையானவர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். கர்ப்பகாலச் சர்க்கரை நோய்க்குச் சரியான கவனிப்பு கொடுப்பது பின்வரும் ஆபத்து ஏற்படுவதைக் குறைக்கிறது:
- உயர் இரத்த அழுத்தம் மற்றும்பேறுகாலத்துக்கு முன் ஜன்னி (நார்வேஜியன் மொழியில்)
- பெரிய குழந்தை மற்றும் சிரமமான பிரசவம்
- சிசேரியன் பிரிவு
- முன்கூட்டிய பிரசவம்
கர்ப்பகாலச் சர்க்கரை நோய்க்கான சிகிச்சை
கர்ப்பகாலச் சர்க்கரை நோய்க்கு உங்கள் பொது மருத்துவர் அல்லது தாதி மூலம் அல்லது மருத்துவமனையின் வெளிநோயாளர் கிளினிக்கில் சிகிச்சை அளிக்கப்படலாம். முதல் சந்தர்ப்பத்தில், சிகிச்சையில் மூன்று பகுதிகள் உள்ளன:
- உணவுக்கு முன்னும் பின்னும் இரத்தச் சர்க்கரையின் அளவை அளவிடுதல்
- உணவில் மாற்றம்
- தினசரி உடல் செயல்பாடு
உங்கள் இரத்தச் சர்க்கரையின் அளவை எவ்வாறு அளவிடுவது
இரத்தச் சர்க்கரையின் அளவு அதிகமாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அதை எவ்வாறு அளவிடுவது என்பது பற்றி உங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
முதல் 1-2 வாரங்களில், காலை உணவுக்கு முன் (உண்ணாநிலை இரத்தச் சர்க்கரை) மற்றும் உங்கள் காலை உணவு மற்றும் மாலை உணவை முடித்த இரண்டு மணிநேரம் கழித்து (தேவைப்பட்டால் மதிய உணவுக்குப் பிறகு) உங்கள் இரத்தச் சர்க்கரையை அளவிடும்படி பரிந்துரைக்கிறோம். உங்கள் அளவீடுகளின் இடைவெளியானது, நிலைமை உங்களுக்கு எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைப் பொறுத்து சரிசெய்யப்படலாம்.
உங்கள் உணவு மற்றும் தினசரிச் செயல்பாட்டு அளவுகளைச் சரிசெய்த பிறகு, உங்கள் இரத்தச் சர்க்கரையின் அளவீடுகள் பின்வருமாறு இருக்க வேண்டும்:
- உண்ணாநிலை இரத்தச் சர்க்கரை: 5.3 mmol/L-க்குக் கீழே
- உணவு தொடங்கிய இரண்டு மணிநேரம் கழித்து: 6.7 mmol/L-க்குக் கீழே
எந்த வாரத்திலும் இந்த அளவுகளுக்கு மேல் இரண்டு அளவீடுகள் இருந்தால், உங்கள் உணவு மற்றும் செயல்பாட்டு அளவுகளை நிர்வகிப்பதற்கான உதவியைப் பெறுவதற்காகவும் அத்துடன் உங்கள் இரத்தச் சர்க்கரையைக் குறைக்க மருந்துச் சிகிச்சை (மெட்ஃபோர்மின் அல்லது இன்சுலின்) தேவையா என்பதை மதிப்பீடு செய்யவும் நீங்கள் மருத்துவமனையின் வெளிநோயாளர் கிளினிக்கிற்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
உங்களுக்குக் கர்ப்பகாலச் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான உணவு ஆலோசனை
கர்ப்பகாலச் சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் உணவின் நோக்கம், நீங்களும் உங்கள் வயிற்றிலுள்ள குழந்தையும் உங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் போதுமான அளவு பெறுவதை உறுதிசெய்வதும், உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகாமல் தடுப்பதும் ஆகும்.
நீங்கள் நீண்ட இடைவெளிகளில் அதிகளவு உணவு எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் அடிக்கடி சிறிதளவாக உணவு உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு ஏற்படுவதை எளிதில் குறைக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் மூன்றுவேளை உணவுகளையும் இரண்டு அல்லது மூன்று தின்பண்டங்களையும் சாப்பிட முயற்சி செய்யலாம். உங்கள் காலை உணவுக்கும் மாலை உணவுக்கும் (10-12 மணிநேரத்திற்கு மேல்) நீண்ட இடைவெளி இருந்தால், சிறிது கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் அடங்கிய சிறிய மாலை உணவை உண்ணுவது நல்லது.
உங்கள் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு தட்டு மாதிரியைப் பயன்படுத்தலாம்:
- 1/2 தட்டு காய்கறிகள்
- அதிக நார்ச்சத்து கொண்ட கார்போஹைட்ரேட் உணவின் 1/4 தட்டு வரை (முழுத் தானிய பாஸ்தா, முழுத் தானிய அரிசி, முழு பிட்டா பிரெட், வேகவைத்த உருளைக்கிழங்கு)
- 1/4 தட்டு அல்லது அதற்கு மேற்பட்ட புரத மூலங்கள் (மீன், கோழி, இறைச்சி, பருப்பு வகைகள், டோஃபு)
கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட உணவு
கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட உணவுகளை உண்ணும்போது உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். உங்கள் இரத்தச் சர்க்கரையின் அளவு எவ்வளவு உயர்கிறது என்பது உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளின் வகை, நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் மற்றும் உங்கள் உணவின் கலவை ஆகியவற்றைப் பொறுத்தது.
காலை உணவின்போது நீங்கள் உண்ணும் கார்போஹைட்ரேட்டுகளின் அளவைக் கட்டுப்படுத்தும்படி குறிப்பாகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இன்சுலின் பெரும்பாலும் காலையில் உகந்ததாக வேலை செய்யாது.
நீங்கள் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும்:
- முழுத் தானியப் பொருட்கள், பீன்ஸ், பருப்புகள், கொட்டைகள் மற்றும் காய்கறிகள் போன்ற இரத்தச் சர்க்கரையை மெதுவாக உயர்த்தும் அதிக நார்ச்சத்துள்ள உணவுகள்
- 75-100% முழுத் தானியத்தின் அடிப்படையில் முழுத் தானியங்கள் மற்றும் விதைகளைக் கொண்ட பொருட்கள் (முழு உணவு அளவுகோலில் 4 பகுதிகள்)
- குருணையாக அரைத்த மாவு உள்ளடக்கம் உள்ள கம்பு, பார்லி, கோதுமை மற்றும் முழுக் கோதுமைத் தானிய மாவில் செய்யப்படும் பிரெட்/மொறுமொறுப்பான பிரெட்
- வழக்கமான வகைகளுக்குப் பதிலாக முழு தானிய பாஸ்தா மற்றும் முழுத் தானிய அரிசி
நீங்கள் உண்ணும் முழுத் தானியத் தயாரிப்புகளின் அளவு உங்கள் இரத்தச் சர்க்கரையின் அளவீடுகளுக்கு ஏற்ப சரிசெய்யப்பட வேண்டும். உணவு ஒன்றுக்கான பொருத்தமான அளவு பின்வருமாறு இருக்கலாம்: 5 தேக்கரண்டி வேகவைத்த அரிசி அல்லது பாஸ்தா, 1 துண்டு பிரெட், 1/2 பிட்டா பிரெட், 30 கிராம் மியூஸ்லி அல்லது 110 கிராம் சமைத்த கஞ்சி.
அதிக சர்க்கரை, குறைந்த நார்ச்சத்து மற்றும் குறைந்த ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்ட உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் இவை இரத்தச் சர்க்கரையின் விரைவான மற்றும் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அத்தகைய உணவுகளில் ஈஸ்ட் சேர்க்கப்பட்ட கேக்குகள் மற்றும் அடுமனையிட்ட இனிப்புப் பொருட்கள், பெரும்பாலான பிஸ்கட் வகைகள், கிரிஸ்ப்கள், வாஃபிள்கள்/பான்கேக்குகள், வெள்ளை பிரெட்/பீட்சா, வெள்ளை அரிசி, அரிசிக் கஞ்சி, சர்க்கரை சேர்க்கப்பட்ட தயிர், சர்க்கரை சேர்க்கப்பட்ட அல்லது குறைந்த நார்ச்சத்து உள்ள காலை உணவுத் தானியங்கள் (சாவித்துளைச் சின்னத்தைக் காண்பிக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும்), பழ/காய்கறிச் சாறு, சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், இனிப்புகள், ஜாம் மற்றும் தேன் ஆகியவை அடங்கும்.
உங்கள் உணவை இனிப்பாக்க இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துங்கள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை விட, செயற்கை இனிப்பூட்டிகளால் செய்யப்பட்ட உணவுகளைத் தேர்ந்தெடுங்கள்.
தாகம் எடுத்தால் தண்ணீர் குடியுங்கள்!
அதிக சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட இனிப்பு அல்லது வேறு ஏதாவது ஒன்றை நீங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட விரும்பினால், உணவின் முடிவில் ஒரு சிறிய பகுதியை உண்ண முயற்சியுங்கள்.
காய்கறிகள், பழங்கள் மற்றும் பெர்ரிகள்
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் 500-800 கிராம் காய்கறிகள், பழங்கள் மற்றும் பெர்ரிகளை உண்ண வேண்டும்.
பழங்களில் பயனுள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளன, ஆனால் இயற்கையான சர்க்கரையும் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒன்று முதல் மூன்று பகுதிகள் பழங்களை உண்ணுங்கள். ஆனால் உங்கள் பழங்களை உணவொன்றிற்கு ஒரு பகுதி என மட்டுப்படுத்துங்கள். சிலர் பழங்களைத் தவிர்க்க வேண்டும், குறிப்பாகக் காலையில். எடுத்துக்காட்டாக ½-1 ஆப்பிள், பேரிக்காய் அல்லது ஆரஞ்சு அல்லது 100-200 மி.லி பெர்ரிகளாக ஒரு பகுதி இருக்கலாம். வாழைப்பழம், மாம்பழம், அன்னாசிப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் மற்ற பழங்களைவிட இயற்கையான சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், அளவோடு சாப்பிட வேண்டும். உலர்ந்த பழங்களையும் தவிர்க்க வேண்டும்.
- காலிஃபிளவர், புரோக்கோலி, லெட்டூஸ், கீரை, தக்காளி, வெள்ளரி, மிளகாய் வகைகள், செலரி போன்றவற்றை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்
- அனைத்து முக்கிய உணவுகளிலும் காய்கறிகளைச் சேர்க்கவும்
- வேகவைத்த/பிசைந்த காய்கறிகளைவிட பச்சைக் காய்கறிகளை உண்ணுவது நல்லது. ஏனெனில் அவற்றைப் பச்சையாக உண்ணும்போது உங்கள் இரத்தச் சர்க்கரை குறைவாக அதிகரிக்கும்
பால் பொருள்கள்
பால் பொருட்கள் பிற பொருட்களுடன் கால்சியம், அயோடின் மற்றும் புரதங்களின் முக்கிய மூலமாகும். பால், சர்க்கரை சேர்க்காத தயிர் மற்றும் கேஃபிர் அனைத்திலும் லாக்டோஸ் உள்ளது. இவற்றை உணவு ஒன்றுக்கு ஒரு கிளாஸ் மட்டுமே என மட்டுப்படுத்த வேண்டும். சீஸ் குறைந்த அளவு லாக்டோஸைக் கொண்டுள்ளது மற்றும் இரத்தச் சர்க்கரையின் அளவுகளில் மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
புரதம் மற்றும் கொழுப்பைக் கொண்ட உணவுகள்
புரதம் இரத்தச் சர்க்கரையின் அளவுகளில் மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளின் ஒரு பகுதியாகப் புரதத்தைக் கொண்ட உணவுகளை நீங்கள் சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் மெலிந்த இறைச்சி மற்றும் கோழி, மீன், முட்டைகள், காட்டேஜ் சீஸ், கிரேக்க தயிர், சீஸ், பீன்ஸ், பருப்புகள், விதைகள், கொட்டைகள் ஆகியவை அடங்கும்.
துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சி, தொத்திறைச்சி மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட இறைச்சிப் பொருட்களில் அதிக அளவு நிரம்பிய கொழுப்புகள் உள்ளன. எனவே அவை குறைவாக எடுக்கப்பட வேண்டும். பதப்படுத்தப்பட்ட இறைச்சிப் பொருட்களும் பலரின் எடை அதிகரிப்பிற்குப் பங்களிக்கின்றன.
கொழுப்பு இரத்தச் சர்க்கரையின் அளவுகளை அதிகரிக்காது. ஆனால் அதில் ஏராளமான கலோரிகள் உள்ளன. எனவே அதிக எடை அதிகரிப்பைத் தவிர்க்க மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும். கொட்டைகள், விதைகள், வெண்ணெய்ப் பழங்கள், ஆலிவ், ஆலிவ் எண்ணெய்/ராப்சீட் எண்ணெய்/சூரியகாந்தி எண்ணெய், மென்மையான தாவர அடிப்படையிலான மார்ஜரின் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை சிறிய அளவில் சாப்பிடுங்கள்.
உடல் செயல்பாடு மற்றும் கர்ப்பகாலச் சர்க்கரை நோய்
உடல் செயல்பாடு இன்சுலின் மிகவும் திறம்படச் செயல்பட உதவுகிறது. எனவே இது கர்ப்பகாலச் சர்க்கரை நோய்ச் சிகிச்சையில் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்களாவது உடல்ரீதியாகச் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். இது நீங்கள் வேகமாகச் சுவாசிக்கவும், சிறிது வியர்ப்பதற்கும் போதுமான அளவுக்கு உழைக்க வைக்கிறது.
வழக்கமான தினசரி உடல் செயல்பாடு நீங்கள் உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக உணர்வதற்கு உதவும்.
- உணவுக்குப் பிறகு உடல் செயல்பாடுகளை மேற்கொள்வது உங்கள் இரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
- உங்கள் உடல் செயல்பாடுகளை தனித்தனிப் பத்து நிமிட அமர்வுகளாகப் பிரிக்கலாம்.
- நீங்கள் பொதுவாக உடல்ரீதியாகச் சுறுசுறுப்பாக இல்லாவிட்டால், வாரத்தில் பெரும்பாலான நாட்களில் 30 நிமிட நடைப்பயிற்சிக்குச் செல்வது நல்லது.
கர்ப்பகாலத்தில் உடல் செயல்பாடு பற்றி மேலும் வாசியுங்கள் (நார்வேஜியன் மொழியில்).
பிரசவத்திற்குப் பிறகு
கர்ப்பகாலச் சர்க்கரை நோய் பொதுவாகப் பிரசவத்திற்குப் பிறகு மறைந்துவிடும். ஆனால் கர்ப்பகாலச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிற்காலத்தில் வகை 2 சர்க்கரை நோய் (நார்வேஜியன் மொழியில்) வருவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. நீங்கள் நார்வே சுகாதார இயக்குநரகத்தின் (Norwegian Directorate of Health) உணவுப் பரிந்துரைகள் (நார்வேஜியன் மொழியில்) மற்றும் உடல் செயல்பாட்டைப் (நார்வேஜியன் மொழியில்) பின்பற்றினால், வகை 2 சர்க்கரை நோயை உருவாக்கும் அபாயம் கணிசமாகக் குறைவதுடன் உங்கள் உடல் எடையும் இயல்புநிலையில் இருக்கும்.
நீங்கள் கர்ப்பகாலச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், குழந்தை பிறந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு உங்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும். பின்னர் வருடத்திற்கு ஒருமுறை உங்கள் இரத்தச் சர்க்கரையின் அளவு இன்னும் இயல்பாக இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும்.
நீங்கள் கர்ப்பகாலச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், எதிர்காலக் கர்ப்பத்தின்போது உங்களுக்கு மீண்டும் கர்ப்பகாலச் சர்க்கரை நோய் உருவாகும் அபாயம் இருக்கும். கர்ப்பம் தரிக்கும்முன் சாதாரண உடல் எடையைப் பெற முயற்சிப்பதும், கர்ப்பகாலத்தில் அதிக எடை அதிகரிக்காமல் இருப்பதும் கர்ப்பகாலச் சர்க்கரை நோய் மீண்டும் வராமல் பாதுகாக்கும் காரணிகள் ஆகும்.
Nasjonal faglig retningslinje for svangerskapsdiabetes (ISBN 978-82-8081-514-9). https://helsedirektoratet.no/retningslinjer/svangerskapsdiabetes
உள்ளடக்கத்தை வழங்கியோர் Helsedirektoratet
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது புதன், 26 ஜூன், 2024