வகை 2 சர்க்கரை நோய்
வகை 2 சர்க்கரை நோய் என்பது உங்கள் இரத்தச் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் ஒரு நிலை. பெரும்பாலான மக்கள் வகை 2 சர்க்கரை நோய் உருவாவதைத் தாமதப்படுத்தலாம் அல்லது வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் நிலைமையின் தீவிரத்தைக் குறைக்கலாம்.
வகை 2 சர்க்கரை நோயின் அறிகுறிகள்
வகை 2 சர்க்கரை நோய் காலப்போக்கில் உருவாகிறது மற்றும் ஆரம்பத்தில் மிகக்குறைந்த அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. நோயறிதலுக்கு முன் நீங்கள் நீண்ட காலமாக இந்த நிலையில் வாழ்ந்தால், நீங்கள் சோர்வாகவும் களைப்பாகவும் உணரலாம். மேலும் உங்களுக்கு எடை இழப்பு ஏற்படலாம் மற்றும் வழக்கத்திற்கு மாறாகத் தாகத்தை உணரலாம்.
வகை 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அறிகுறிகளைக் கொண்டிருப்பதில்லை என்பதால், வகை 2 சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும் பிற காரணிகளை மருத்துவர்கள் கவனிக்க வேண்டும். அவையாவன:
- அதிக எடை அல்லது பருமனாக இருப்பது
- பெரிய இடுப்பு அளவு (ஆண்களுக்கு 94 செ.மீ. மற்றும் பெண்களுக்கு 80 செ.மீ.)
- குறைந்த அளவுகளில் உடல் செயல்பாடு (ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்குக் குறைவான உடல் செயல்பாடு)
- அதிக இறைச்சி, நிரம்பிய கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை உள்ளடக்கம் மற்றும்/அல்லது சிறிய நார்ச்சத்து, முழுத் தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்ட உணவுகள் மற்றும் பானங்களின் அதிக நுகர்வு
- பரம்பரைக் காரணிகள் (உங்கள் பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்கள் வகை 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கும் அது உருவாகும் ஆபத்து அதிகமாக இருக்கும்)
- இனம் (ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ளவர்களுக்கு வகை 2 சர்க்கரை நோய் உருவாகும் ஆபத்து அதிகமாக உள்ளது)
- வயது (நீங்கள் வயதாகும்போது, இன்சுலின் செயல்திறன் குறைவாக வேலை செய்கிறது)
- கார்டிகோஸ்டீராய்டுகளின் பயன்பாடு (பிரெட்னிசோலோன் போன்றவை) மற்றும் சில மனநோய் எதிர்ப்பு மருந்துகள் (க்ளோசாபின் மற்றும் ஓலான்சாபின் போன்றவை)
- புகைபிடித்தல்
- கடந்த காலத்தில் கர்ப்பகாலச் சர்க்கரை நோய் ஏற்பட்டிருத்தல்
வகை 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு பின்வருவனவும் உள்ளன:
- நீர்க்கட்டி மிகை சினைப்பை நோய்க்கூட்டு அறிகுறி (பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் - PCOS)
- உயர் இரத்த அழுத்தம்
- இதயக் குழலிய நோய் (கார்டியோவாஸ்குலர் நோய்)
- தூக்கத்தை இடையூறு செய்யும் மூச்சுத்திணறல் (தூக்கத்தின்போது சுவாசம் நிற்றல்)
ஆய்வு மற்றும் நோயறிதல்
உங்கள் சராசரி இரத்தச் சர்க்கரையின் அளவை (HbA1c) அளவிடும் இரத்தப் பரிசோதனையைப் பயன்படுத்தி வகை 2 சர்க்கரை நோய் கண்டறியப்படுகிறது. இரத்த மாதிரி கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் உங்கள் உடலில் உள்ள சராசரி இரத்தச் சர்க்கரையின் அளவைப் பிரதிபலிக்கும்.
வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்ட இரண்டு மாதிரிகளில் உங்கள் சராசரி இரத்தச் சர்க்கரையின் அளவு 48 mmol/mol.-ஐவிட அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருந்தால் உங்களுக்குச் சர்க்கரை நோய் உள்ளது. முடிவுகள் 42 மற்றும் 46 mmol/mol இடையே இருந்தால், உங்களுக்கு வகை 2 சர்க்கரை நோய் உருவாகும் ஆபத்து அதிகமாக உள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில், இந்த நிலையை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிய உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் உங்கள் சராசரி இரத்தச் சர்க்கரையின் அளவையும் அளவிட வேண்டும்.
உங்களுக்கு வகை 2 சர்க்கரை நோய் இருந்தால் உங்கள் உடலுக்கு என்ன நடக்கும்?
வகை 2 சர்க்கரை நோயில், உணவுக்குப் பிறகு இரத்தத்தில் சுற்றியோடும் குளுக்கோஸ் உங்கள் உடலில் உள்ள உயிரணுக்களால் உறிஞ்சப்படாது. உயிரணுக்கள் போதுமான குளுக்கோஸை உறிஞ்சாததற்குக் காரணம், இன்சுலின் வேலை செய்யாமல் இருப்பது மற்றும்/அல்லது உங்கள் உடலால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் இருப்பதுதான்.
இன்சுலின் என்பது கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன் ஆகும். இது நீங்கள் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து கிடைக்கும் குளுக்கோஸ் உங்கள் உடலில் உள்ள உயிரணுக்களுக்குள் நுழைவதை உறுதி செய்கிறது. அங்கு அது ஆற்றலுக்குப் பயன்படுத்தப்படலாம். காலப்போக்கில் உங்கள் இரத்தத்தில் அதிக குளுக்கோஸ் இருப்பது, உங்கள் உடலில் உள்ள பல உறுப்புகளைச் சேதப்படுத்தலாம்.
கல்வி மற்றும் சுய-பராமரிப்பு
உடல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவு வகை 2 சர்க்கரை நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும். வகை 2 சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கான அடித்தளங்களாகவும் அவை அமைகின்றன.
வகை 2 சர்க்கரை நோயில் உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி
உணவு மாற்றங்களுடன்இணைந்த உடல் செயல்பாடே வகை 2 சர்க்கரை நோய்க்கானசிகிச்சையில் முதல் தேர்வாகும். மேலும் அது உங்களுக்குத் தேவையான மருந்துகளின் அளவைக் குறைக்கலாம்.
வாழ்க்கை முறை மாற்றங்கள் தாமதமாக வெளித்தோன்றும் காயங்கள் மற்றும் மருந்துகளின் தேவையைக் குறைக்கின்றன. சிலர் பெரிய வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் நிலைமையை மாற்றியமைக்கலாம். இது பொதுவாக அதிக எடை அல்லது பருமனான மற்றும் ஏராளமான எடை இழக்கும் நபர்களுக்குப் பொருந்தும். குறைந்தபட்சம் 5-15% எடை இழப்பு பொதுவாக தேவைப்படும். இது நிவாரணம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் நீங்கள் செய்த வாழ்க்கை முறை மற்றும் எடை மாற்றங்களின் விளைவாக உங்கள் இரத்தச் சர்க்கரையின் அளவு சாதாரணமாக இருக்கும். ஆனால் நிலைமை திரும்ப வரலாம். இது உங்கள் இலக்காக இல்லாவிட்டால், சிறிய வாழ்க்கை முறை மாற்றங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்தலுக்கும் நல்ல சுய-பராமரிப்புக்கும் முயற்சி மற்றும் அறிவு ஆகிய இரண்டும் தேவை. உங்கள் பொது மருத்துவர், மருத்துவமனை அல்லது நகராட்சியில் உள்ளஆரோக்கியமான வாழ்க்கை முறை மையம் போன்ற பிற சேவைகளிடமிருந்து நீங்கள் வழிகாட்டுதலையும் ஆதரவையும் பெறலாம். வகை 2 சர்க்கரை நோயின் நடைமுறை அம்சங்களைப் பற்றிய தகவல் பாடங்கள் உங்கள் உள்ளூர் மருத்துவமனையில் கிடைக்கின்றன.
தாமதமாக வெளித்தோன்றும் காயங்களைத் தடுத்தல்
சர்க்கரை நோய்ச் சிகிச்சையானது உங்கள் இரத்தச் சர்க்கரையின் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், இருதய நோய் மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்படும் பிற தாமதமான காயங்கள் (பார்வைக் குறைபாடு, பாதங்களில் உணர்வு குறைதல், சிறுநீரகப் பாதிப்பு மற்றும் விறைப்புத்தன்மைக் குறைபாடு போன்றவை) ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பின்வரும் காரணிகள் சர்க்கரை நோயால் தாமதமாக வெளித்தோன்றும் காயங்களின் அபாயத்தைப் பாதிக்கின்றன. எனவே உங்கள் மருத்துவரிடம் கலந்துரையாட வேண்டும்:
- உடல் செயல்பாடு
- உணவுக் கட்டுப்பாடு
- எடை இழப்பு (நீங்கள் அதிக எடையுடன் இருந்தால்)
- புகைபிடிப்பதை நிறுத்துதல் (பொருந்தினால்)
- இரத்த குளுக்கோஸ் மேலாண்மை மற்றும் சராசரி இரத்தச் சர்க்கரையின் அளவு (HbA1c)
- இரத்த அழுத்தம்
- இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவு (குறிப்பாக LDL இரத்தக் கொழுப்பு)
புகைபிடிக்கும் பழக்கம்
சர்க்கரை நோயாளிகளுக்கு புகைபிடித்தல் குறிப்பாக ஆபத்தானது. நீங்கள் புகைபிடித்தால், அதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். புகைபிடித்தல் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற மிகவும் தீவிரமான மற்றும் பொதுவான சர்க்கரை நோய்ச் சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. புகைபிடித்தல் என்பது சர்க்கரை நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு அதிக ஆபத்துடன் தொடர்புடைய பல நோய்கள் உருவாகும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இந்த நிலைமைகளில் கால்களில் இரத்த ஓட்டம் குறைதல், கால் புண்கள், இதயச் செயலிழப்பு, விறைப்புத்தன்மை, ஈறு தொற்றுகள், கண்புரைகள், புற்றுநோய், மறதிநோய் ஆகியவை அடங்கும். சர்க்கரை நோயுடன் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று புகைபிடிக்காமல் இருப்பதாகும்.
ஆலோசனை, மொபைல் பயன்பாடுகள், படிப்புகள் மற்றும் மருந்துகள் வடிவில் புகைபிடிப்பதை விட்டுவிட உதவும் பல பயனுள்ள கருவிகள் உள்ளன. மேலும் புகைபிடிப்பதை வெற்றிகரமாக நிறுத்த உங்கள் மருத்துவரும் உங்களுக்கு உதவலாம்.
சர்க்கரை நோய் மற்றும் பல் ஆரோக்கியம்
உங்களுக்குச் சர்க்கரை நோய் இருந்தால் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம் (pdf). இதைச் செய்வதற்கான சிறந்த வழி, ஃபுளோரைடு பற்பசை மற்றும் ஃப்ளோஸ் மூலம் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவதை உறுதிசெய்வது அல்லது இன்டர்டென்டல் பிரஷைத் தினசரி பயன்படுத்துவது.
சர்க்கரை நோய் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தி, வாய் வறட்சியை அதிகரிக்கும். இது பாக்டீரியாவைப் பெருக்கி ஈறு அழற்சியை ஏற்படுத்துகிறது. ஈறு அழற்சி இரத்தச் சர்க்கரை நிர்வாகத்தை மோசமாக்கும் மற்றும் பற்கள் தளர்வதற்கு வழிவகுக்கும்.
நீங்கள் கடுமையான ஈறு அழற்சியை உருவாக்கினால், உங்கள் பல்மருத்துவர் நீங்கள் சமூகப் பாதுகாப்பு பலன்களைப் பெறுவதற்குத் தகுதியுள்ளவரா என்பதை மதிப்பிடலாம்.
வகை 2 சர்க்கரை நோய்க்கான மேலாண்மை மற்றும் சோதனைகள்
வகை 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் தங்கள் பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்கிறார்கள், ஆனால் சிலர் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்கிறார்கள். நீங்கள் எப்போதெல்லாம் சர்க்கரை நோய் பரிசோதனைகளை மேற்கொள்கிறீர்கள் என்பது உங்கள் தேவைகளைப் பொறுத்தது.
ஒரு வருட காலப்பகுதியில், சர்க்கரை நோய் சிக்கல்களுக்கான பல்வேறு ஆபத்துக் குறிப்பான்களை நீங்கள் சரிபார்க்க வேண்டும். இந்த அபாயக் குறிப்பான்கள் ஒவ்வொன்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை உறுதிசெய்துகொள்வது, சிக்கல்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும். இது பெரும்பாலும் “வருடாந்திரச் சோதனை” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இது பல மருத்துவரின் சந்திப்புகளாகப் பிரிக்கப்படலாம்.
Nasjonal faglig retningslinje for diabetes (IS-2685). https://helsedirektoratet.no/retningslinjer/diabetes
உள்ளடக்கத்தை வழங்கியோர் Helsedirektoratet
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது வியாழன், 21 மார்ச், 2024